பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட நடிகர் திரு. மாரிமுத்து அவர்களின் மரணம் உணர்த்தும் செய்தி என்ன?
- Nandhakumar MK - MK Holistic Health

- Sep 10, 2023
- 2 min read
ஒவ்வொரு காலங்களிலும் இந்த பிரபஞ்சம் ஆனது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு செய்தியை இவ்வுலக மக்களுக்கு உணர்த்துகிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு தான் இந்த விழிப்புணர்வு பதிவு.

பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர், ஒவ்வொரு வீட்டு தாய்மார்களை கவர்ந்த எதிர் நீச்சல் புகழ் "திரு. மாரிமுத்து" ஐயா அவர்கள் நேற்று (08-09-2023) மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்.
ஆழ்ந்த இரங்கல்! அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்!!
இல்லத்தரசிகளின்/ வெகுஜன மக்களின் அன்பை பெற்ற புகழின் உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த ஒருவருக்கு எப்படி இந்த மரணம் ஏற்பட்டு இருக்கலாம் என்பதை அறிய முயற்சிக்கலாம்.
முன்னதாக 08-09-2023 அன்று எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்துவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக டப்பிங் அறையில் இருந்து வெளியே வந்த மாரிமுத்து உடனடியாக தனது காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அனுமதியான சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது.
பொதுவாக அவர் அனைவரிடமும் உரிமையாகவும், பேரன்புடனும், கடுங்கோபத்துடனும் பேசும் குணத்தை உடையவராக இருந்தார்.
அவருடைய பேச்சில் அதீத பற்றும், தான் தவறு என நினைக்கும் சில விஷயங்களின் மீது அதீத கோவமும், அதீத வெறுப்பும் ஒவ்வொரு இடங்களில் வெளிப்பட்டதை பார்க்க முடிகிறது.
பொதுவாக அவர் சின்னத்திரை / பெரிய திரையில் எதிர்மறை கதா பாத்திரத்தை மிகுந்த தனித்துவத்துடன் நடிப்பதில் மிகுந்த திறமை வாய்ந்தவராக இருந்தார்.
ஒருவர் எதை அதிகம் நினைக்கிறார்களே, எதை அதிகம் பேசுகிறார்களோ, எதை அதிகம் பார்க்கிறார்களோ அந்த செயல்களின் தாக்கம் அவரின் உடலின் ஒவ்வொரு செல்களிலும் பிரதிபலிக்கும்.
இவர் தொடர்ச்சியாக சீரியல், சினிமா என பலவற்றில் ஓய்வில்லாமல் உழைத்ததும், எதிர்மறை கதாபாத்திரங்களில் தொடர்ச்சியாக நடித்ததும் இவருடைய இந்த இதய நோய்க்கு காரணமாக அமைகிறது.
இயற்கை மருத்துவ புரிதல்கள் அடிப்படியில் ஒருவரின் நோய்க்கான காரணமாக ஒருவரின் முறையற்ற உணவு பழக்கம், தூக்கமின்மை, அதீத உடல் உழைப்பு, உழைப்பின்மை போன்ற வாழ்வியலையும் தாண்டி குணங்களின் தன்மையும் (எண்ணங்கள்) உடல் உள்ளுறுப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் அறிவோம்.
அக்குபஞ்சர் தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தீய குணங்களும் ஒவ்வொரு உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது கவலை என்ற குணம் மண்ணீரலையும், துக்கம் என்ற குணம் நுரையீரலையும், பயம் என்ற குணம் சிறுநீரகத்தையம், கோபம் என்ற உணர்ச்சி / குணம் கல்லீரலையும், பெருமை, பொறாமை, வெறுப்பு போன்ற குணங்கள் இதயத்தையும் பாதிக்கின்றது .
உதாரணத்திற்கு ஒருவர் பிறர் மீது கோபம் உணர்ச்சியை / குணத்தை வெளிப்படுத்தும் போது, அவருடைய கல்லீரலுக்கு அதன் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் தான் எதிரில் இருப்பவரின் மனதை தாக்கும் என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். பிறகு கல்லீரலில் இருந்து இதன் பாதிப்பு இதயத்தை பாதிக்கும். இதய பாதிப்புக்கு வெறுப்புணர்வும் காரணமாகிறது.
நீங்கள் தீய குணங்களை நடிப்புக்காக வெளிப்படுத்தினாலும் கூட, அது உங்களின் உடலை பாதிக்கும் என்பதை உணர வேண்டும்.
மேலும் நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளையும், எழுதும் எழுத்துக்களையும் மிகுந்த கவனத்தோடும் நேர்மறையாகவும் அடுத்தவர் மனதை சிறிதளவும் காயப்படுத்தாமலும் இருப்பதை அனுதினமும் உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக திரை துறையில் (சின்ன திரை / பெரிய திரை) இருப்பவர்கள் எதிர்மறை கதாபாத்திரங்களையே எப்போதும் தேர்வு செய்து நடிக்க கூடாது, அவர்களின் உடல் மற்றும் மனா ஆரோக்கியத்தை முக்கியமாக கருதினால்.
தீய எண்ணங்களை தோற்றுவிக்கும், வன்முறை நிறைந்த. வெறுப்புணர்வை தூண்டும், அருவருப்பான வசனங்களை, காட்சிகளை, கதைகளை படமாக, சீரியலாக எடுக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் முன் வர கூடாது.
இது போன்ற கதைகள், வசனங்கள், காட்சிகள் தான் நடிப்பவரையும் பாதிக்கின்றது. அதை பார்க்கும் ஒவ்வொரு மக்களையும் / குடும்பத்தையும் சீரழிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது..
பொது மக்களும் அதீத விருப்பு, வெறுப்புகளுக்குள் சிக்கி கொள்ளாமல் மனதை எப்போதும் சமநிலையில் வைத்து கொண்டு அமைதியாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும்.
இந்த உலகம் அனைவருக்குமானது!
சிந்தனை போல் வாழ்க்கை!
என்றும் மக்கள் நலனில் சமூக அக்கறையுடன்..
உங்கள் நண்பன்
நந்தகுமார்







Comments